தமிழ்நாட்டிற்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து அவருக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் . அவர் ஆளுநர் போல் நடந்துகொள்ளாமல் முழு நேர அரசியல்வாதியை போல் நடப்பதாக தமிழகத்தை தற்போது ஆளும் திமுக உள்பட அதன் கூட்டனி கட்சி தலைவர்கள் தொடர்ந்து குறை கூறி வருகின்றனர் .
அதற்கேட்டார் போல் ஆளுநர் ஆர்.என்.ரவியும் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பேசும் கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை கிளப்பி அதுவே பூகம்பமாய் வெடிக்கிறது . அந்தவகையில் சில நாட்களுக்கு முன் உதகையில் நடைபெற்ற பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர் என் ரவி வெளிநாடுகள் செல்வதாலோ, தொழில் அதிபர்களை நேரில் சென்று கேட்பதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய தொழில் முதலீடுகளை ஏற்பதற்கு சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்; முதலீடுகளை ஈர்க்க திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழி என தமிழக முதலமைச்சர் சமீபத்தில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதை சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தார் .
ஆளுநரின் அந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர் . இந்நிலையில் ஆளுநரின் இந்த பேச்சு உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே விரோதமானதாகும். தமிழ்நாட்டில் மூலதனமிட தயாராக உள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களை தடுக்கும் வகையில் ஆளுநரின் பேச்சு அமைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது .
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிருப்பதாவது : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தொடர்ந்து ஆளுநருக்குரிய அதிகார வரம்புகளை மீறி செயல்படுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மாநில அமைச்சரவையின் ஆலோசனைகளை ஏற்றுத்தான் ஆளுநர் செயல்பட முடியும் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய பிறகும் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.
அரசியல் சாசன அடிப்படையில் உருவாக்கப்பட்ட பதவியில் இருந்து கொண்டு அதற்கு புறம்பாக நடந்துகொள்வது அநியாயமானது. பொதுவெளியில் ஆளுநர் பேசும் கருத்துக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
அரசியல் சாசனத்திற்கு விரோதமாகவும், ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் கருவியாகவும் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமெனவும், இவரை ஆளுநர் பொறுப்பிலிருந்து பதவி நீக்கம் செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.