மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக தமிழக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், உயர்நீதி மன்றம் தெரிவித்து இருந்த அறிவுரைகளின் படி, மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார்கள் அளிக்க குழு அமைக்க வேண்டும் என்றும் பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பள்ளிகள் இயங்கும் அதிகார வரம்புக்குட்பட்ட, மகளிர் காவல் நிலையத்தின் எண்களையும் எழுதி வைப்பதுடன் மேற்கண்ட கல்வி அதிகாரிகள் வாரம் ஒருமுறை புகார் பெட்டிகளை ஆய்வு செய்து, அதில் பெறப்பட்டுள்ள புகார்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் மேற்கண்ட அதிகாரிகள் மாதம் ஒரு முறை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் பெறுவதுடன், பாலியல் துன்புறுத்தல் நடக்காத வகையில் மாணவியருக்கு நம்பிக்கை மற்றும் துணிவையும் போதிக்க வேண்டும்.
அத்துடன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோர் ஆசிரியராக இருந்தாலும் அல்லது ஆசிரியர் அல்லாத பணியாளராக இருந்தாலும் நிர்வாகத் தரப்பினராக இருந்தாலும் அவர்கள் மீது புகார் கொடுக்க தயங்காத வகையில் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் அறிவுரை வழங்க வேண்டும்.
மேலும், பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதா, விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதுகுறித்த அறிக்கையை உடனடியாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநருக்கு அனுப்பி வைத்து, அதன் நகலை தங்களிடம் வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது