ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு நேரத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது . இந்த கோர விபத்தில் ரயில்களில் பயணித்த ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை வெளிவந்துள்ள அதிகாரபூர்வ தகவலின்படி, இந்த பயங்கர விபத்தில் 250-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், சிறு காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார் .
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதுமட்டுமல்லால் விபத்தில் உயிரிழந்த , காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு அந்தந்த மாநில அரசுகள் நிவாரண நிதிகளை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கோர விபத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசை பலர் குறை கூறி வசைபாடி வருகின்றனர் . அந்தவகையில் தற்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
- இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது ஏன்?
- ரயில் ஓட்டுநர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பணி நேரத்தை விட கூடுதலாக பணிபுரிய கட்டாயப்படுத்துவது ஏன்?
- ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, பிரச்னையை திசை திருப்புவதற்காகவா?
- ரயிலில் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டது ஏன்?
- காங்கிரஸின் ‘ரக்ஷா கவாச்’ என்ற திட்டத்தை ‘கவாச்’ என மாற்றிய அரசு, 4% தடங்களில் மட்டுமே செயல்படுத்தியிருப்பது ஏன்? உள்ளிட்ட கேள்விகளை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு முன்வைத்துள்ளார் .