நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் மதியம் 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வருகிற 19 ஆம் தேதி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
கடந்த 28 தேதி முதல் தொடங்கிய இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் பிப்.4-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் சுயேட்சை வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால், பணம் பட்டுவாடாவை தடுக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து பணம் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் மதியம் 3 மணிக்கு ஆலோசனை நடத்தவிருக்கிறார். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் பிற்பகலில் ஆலோசனை நடத்துகிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம், பேரணி நடத்த கட்டுப்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.