உதகை அரசு கலைக் கல்லூரியில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், வரும் அக்டோபர் 3ம் தேதி வரை கல்லூரி மூடப்படுவதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதகை அரசு கலைக் கல்லூரியில் தற்காலிக பேராசிரியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, கல்லூரியில் உள்ள மாணவ மாணவிகள் மற்றும் பேராசியர்கள் என 154 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து மேலும் நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் அக்டோபர் 3ம் தேதி வரை கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டு, கல்லூரி வளாகம் மற்றும் வகுப்பறைகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டன.
மேலும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், அதுவரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும் கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி தெரிவித்தார்.