இங்கிலாந்தில் 1 லட்சம் குழந்தைகளில் 700 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. வேகமாக நடைபெறும் தடுப்பூசி பணிகள் மற்றும் கொரோனாவுக்கு எதிரான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பாதிப்பு நிலைமை மேம்பட்டு வருகிறது.
அதேநேரம் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளிலேயே கொரோனாவின் வீரியம் இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதில் இங்கிலாந்து முன்னணியில் நிற்கிறது.
இங்கிலாந்தில் நேற்று முன்தினமும் 46,807 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 97 லட்சத்து 21 ஆயிரத்து 916 ஆக உயர்ந்திருக்கிறது.
இதைப்போல கொரோனாவால் மேலும் 199 பேர் உயிரிழந்துள்ளனர். இது மொத்த கொரோனா பலி எண்ணிக்கையை 1,43,559 ஆக உயர்த்தி இருக்கிறது. இங்கிலாந்தில் 5 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளிடம் அதிக அளவில் தொற்று காணப்படுவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.
குறிப்பாக 1 லட்சம் குழந்தைகளில் 700 குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் நாடு முழுவதும் தொடர்ந்து கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.