அவசரகால பயன்பாட்டிற்கு கோவோவேக்ஸ் தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ள உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் தடுப்பூசிகள் முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. இதில் பல தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பு, அவசரகாலப் பயன்பாடுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை 9 கொரோனா தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சீரம் நிறுவனத்தின் கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அவசரகால பயன்பாட்டு அனுமதியை வழங்கி உள்ளது.
அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்ய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனம் உற்பத்தி செய்த கோவோவேக்ஸ் தடுப்பு மருந்திற்கு உலகளாவிய அவசரகால பயன்பாட்டு அனுமதி கோரி உலக சுகாதார நிறுவனத்திடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு உலக சுகாதார நிறுவனம் நேற்று அங்கீகாரம் வழங்கியது.
இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவன அறிக்கையில், ‘புதிய வகை வைரஸ் பரவும் நிலையில் தடுப்பூசி போடும் வேகத்தை அதிகப்படுத்தவும், குறைந்த வருமானமுள்ள நாடுகள் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் அதிகப்படியான தடுப்பூசிகளை பெற வேண்டியதும் அவசியமாகி உள்ளது’ என கூறப்பட்டுள்ளது.