நெய்வேலியில் வீடின்றி கஷ்டப்பட்ட 6 நரிக்குறவர் குடும்பங்களுக்கு இசையமைப்பாளர் டி.இமான் வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார்.
தமிழன் திரைப்படத்தின் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான டி.இமான், இதனைத் தொடர்ந்து, ஜில்லா, விஸ்வாசம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மைனா உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
மோனிகா ரிச்சர்டு என்பவரை திருமணம் செய்துகொண்ட இமானுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ள நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதனை அடுத்து அமீலா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இமான், தற்போது இரண்டாவது மனைவியோடு சேர்ந்து 6 நரிக்குறவர் குடும்பங்களுக்கு குடிசை வீடுகளை கட்டிக் கொடுத்து உதவி இருக்கிறார்.
கடலூர், நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே உள்ள பெரியாக்குறிச்சி பகுதியில் 30 க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக வசித்து வரும் இவர்கள் தங்கியுள்ள வீடுகள் அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்த காணப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து தகவலை அறிந்த இசையமைப்பாளர் இமான் இரண்டு லட்சம் மதிப்பீட்டில் அப்பகுதியிலுள்ள ஆறு குடும்பங்களுக்கு குடிசை வீடுகள் சீரமைத்து குடுத்துள்ளார். மேலும் மூன்று வீடுகளுக்கு தார்பாய்கள் மற்றும் மாணவர்களுக்கு இரவு நேர பாடசாலை தொடங்கி வைத்து நோட்டு புத்தகங்கள் வழங்கினார். இதனை அடுத்து நன்றி தெரிவித்த அப்பகுதி நரிக்குறவர் இன மக்கள் இமானுடன் செல்ஃபி எடுத்தனர் மகிழ்ந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இமான், நான் இப்பகுதிக்கு சமூக ஆர்வலராக தான் வந்துள்ளேன் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. நான் டி இமான் என்கின்ற தொண்டு அறக்கட்டளை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். நான் இப்பகுதி மக்களுக்கு குடிசை வீடுகள் மற்றும் பாடசாலைகள் அமைத்து கொடுத்துள்ளேன் என்று கூறினார்.
இசையமைப்பாளர் இமான் செய்த இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.