இந்தியாவில் கொரோனா மொத்தப் பாதிப்பு 3,53,68,372 ஆக அதிகரித்துள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 40,925 பேர், கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா முதல் அலையை காட்டிலும், இரண்டாவது அலையில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், கடந்த நவம்பர் மாதம் ஒமைக்ரான் என்ற புதியவகை கொரோனா தென் ஆப்பிரிக்காவில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த வைரஸின் பாதிப்பு டெல்டாவை விட குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டாலும், அதிவேகத்தில் பரவும் ஆபத்து உள்ளதால், மீண்டும் உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, தினசரி பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழே இருந்த நிலையில், திடீரென கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது.
நேற்று 1,17,100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்று 2-வது நாளாக காலை 8 மணி நிலவரப்படி, நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 1,41,986 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 21.3 சதவீதம் அதிகம் ஆகும். இதையடுத்து, நாட்டின் கொரோனா மொத்தப் பாதிப்பு 3,53,68,372 ஆகும்.