கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு பிரத்யேக ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான நாளை (15.09.23) வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதன் பிறகு நாளை முதலே ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து விடும்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகள் மாதந்தோறும் ரூ.1000 பெற்று பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி மொத்தம் 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருந்த நிலையில், அவற்றில் கிட்டத்தட்ட 57 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் பெண்களுக்கு பிரத்யேக ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட உள்ள நிலையில், நாளை காஞ்சிபுரத்தில் இந்த பிரத்யேக ஏ.டி.எம். கார்டுகளை பயனாளிகளுக்கு வழங்கி இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளுக்கு நாளை முதல் வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படுகிறது. இந்த பிரத்யேக ஏ.டி.எம். கார்டில் பயனாளரின் பெயர், மாதம், வருடம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளது.