தீபாவளி பண்டிகையை முடித்து, மக்கள் ஊர் திரும்ப வசதியாக சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கும் 8-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட பல்வேறு இடங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றனர். தீபாவளி பண்டிகை முடிந்துள்ள நிலையில் , நேற்று முதல் மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து தமிழக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை முடித்துவிட்டு, மக்கள் நேற்று மதியம் முதல் திரும்பத் தொடங்கியுள்ளனர். சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கும் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகளை இயக்குகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,319 சிறப்பு பேருந்துகளை 8-ம் தேதி வரை இயக்க உள்ளோம் என்றும், இதேபோல, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை உட்பட பல்வேறு ஊர்களுக்கு 5 ஆயிரம் பேருந்துகளை இயக்க உள்ளோம் என்றும் தெரிவித்த தமிழக போக்குவரத்து கழக அதிகாரிகள், 8-ம் தேதி வரை மொத்தம் 17,719 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூட்டத்துக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.