சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்யப்பட்டதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த 5 மாதங்களாக அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 முறை மனுத் தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அக் மாதம் 19 ஆம் தேதி உடல்நலனைக் காரணம் காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார்.ஆனால், மருத்துவ காரணங்களை கூறி ஜாமீன் கேட்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றமும் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைக்கப்பட்டது.ஆனால் இதனை ஏற்காத உச்சநீதிமன்றம் நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை அக்டோபர் 30-ம் தேதி விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதனடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. இன்றைய விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? இல்லையா என்பது தெரியவரும்.