நேற்று வார விடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் (palani murugan temple) திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு (palani murugan temple) தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், வார விடுமுறை, விசேஷ நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருந்ததால் கடந்த 2 மாதங்களாகவே சனி, ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை நாட்களில் குடும்பத்துடன் ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோடை விடுமுறை முடிந்து இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட இருந்ததால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வாரவிடுமுறை மற்றும் கோடை விடுமுறை இறுதி நாள் என்பதால் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுத்தனர்.
நேற்று குறிப்பாக காலை முதலே அடிவாரம் பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில் மற்றும் கோவிலின் தரிசன வழிகள் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர்.
மேலும், மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையங்களிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
இதற்கிடையே, நேற்று இரவு மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெற்ற நிலையில், அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.