தருமபுரி மாவட்டத்தில் மலைப்பாதை ஒன்றில் ரயில் கடந்தபொழுது, திடீரென மண்சரிவு ஏற்பட்டதால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.
தருமபுரி மாவட்டத்தில் முத்தம்பட்டி மலைப்பாதை அமைந்துள்ளது. இன்று அதிகாலை கேரளாவிலிருந்து பெங்களூரு பயணிகள் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது.
இன்று அதிகாலை சேலம் ரயில் நிலையத்தை கடந்த இந்த ரயில் 3.50 மணியளவில் தருமபுரி மாவட்டம் வே.முத்தம்பட்டி மலைப்பாதை அருகே வந்த போது ரயில் பாதையை ஒட்டிய மலைப்பகுதியிலிருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
தடதடவென சரிந்த பாறைகளும் பெயர்ந்து ரயில் என்ஜினில் சிக்கி கொண்டது. இதனால் என்ஜினையொட்டியிருக்கும் 5 பெட்டிகளும் தடம் புரண்டது.
நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே பணியாளர்கள் தொடர் கனமழையிலும் ரயில் மீட்பு மற்றும் பாதை சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒற்றை வழித்தட ரயில்பாதையாக இந்த வழித்தடம் அமைந்துள்ளதால் இவ்வழியே செல்லும் அனைத்து ரயில்களின் இயக்கமும் இதனால் தாமதமாகியுள்ளன. விபத்து நடந்த இடம் வனப்பகுதியின் நடுவே உள்ளதால் ரயிலில் உள்ள பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.