குஜராத்தில் வைர கற்கள் தெருவில் கொட்டி விட்டது என்ற தகவல் பரவியதால் மக்கள் கூட்டம் கூடி ஒன்று கூடி தெருவையே கூட்டி, பெருக்கி வைர கற்களை தேடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குஜராத்தின் சூரத் நகரில் உள்ள வரச்சா என்ற பகுதியில் உள்ள சிறிய பஜார் ஒன்றில், வைர வியாபாரி ஒருவர் சென்றுள்ளார். அப்போது அவரிடம் இருந்த கோடிக்கணக்கான மதிப்பிலான வைர கற்கள் தவறுதலாக அந்த பகுதி தெருவில் விழுந்து விட்டதாக தகவல் பரவியது.
இதனை அறிந்ததும், அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று கூடி, தங்களுடைய வேலையை எல்லாம் விட்டுவிட்டு தெருவில் கிடக்கும் வைர கற்களை தேட தொடங்கினர். சந்தையில் இருந்த குப்பைகளை எல்லாம் சிலர் கூட்டி, பெருக்கி அலசினர்.
அப்போது, ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் கைகூடிய நிலையில், அவர்களுக்கு வைர கற்கள் கிடைத்துள்ளன. ஆனால், அதன்பின்னரே அவை அமெரிக்க வைரங்கள் என தெரிய வந்துள்ளது. இதனால், அங்கு தீவிரமாக வைரங்களை தேடிக் கொண்டிருந்தவர்கள் தேடலை கைவிட்டனர்.
இதுகுறித்து அந்த தெருவில் வைரங்களை தேடியவர்களில் ஒருவரான பன்சேரியா என்ற நபர் செய்தியாளர்களிடம் கூறுகையில்..
வைரத்தை தேடிய போது ஒருவருக்கு வைரம் கிடைத்தது. ஆனால், அது ஒரு போலியான வைரம் என்று பின்னரே தெரிந்தது. அது அமெரிக்க வைரம். கவரிங் நகை அதாவது, சேலைகளுக்கு வேலைப்பாடுகள் செய்ய பயன்பட கூடிய வைரம் அது.
பொதுமக்களை ஏமாற்றுவதற்கு வேண்டும் என்றே எவரோ சிலர் பிராங்க் விளையாட்டில் ஈடுபட்டு உள்ளது போன்று தோன்றுகிறது” என்று கூறினார். இந்த சம்பவம் பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.