நடிகை சிம்ரன் சமீபத்தில் தளபதி விஜய்யை நேரில் சந்தித்து பேசிய போது ‘நான் அடுத்து தயாரிக்க இருக்கும் படத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும்’ என கேட்டதாகவும், அதற்கு விஜய் முடியாது என பதில் சொல்லிவிட்டார் என்றும் ஒரு செய்தி பரவியது.
இதனிடையே படம் தயாரிப்பது எல்லாம் ரொம்ப கஷ்டம், அதிகம் செலவு இருக்கும் என விஜய் சிம்ரனுக்கு அட்வைஸ் சொன்னதாகவும் முன்னணி பத்திரிக்கையில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதுமட்டுமல்லாமல் விஜய்யின் கடைசிப் படமான விஜய் 69-ல் நடிக்க சிம்ரன் வாய்ப்புக் கேட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அதை மறுத்துள்ள சிம்ரன் காட்டமாகப் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“இதுவரை எந்த பெரிய கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டதில்லை. வாய்ப்புகள் வந்தபோது நடித்திருக்கிறேன். இப்போது என் வாழ்வின் இலக்குகள் மாறிவிட்டன. ஒருபெண்ணாக, எனது எல்லைகளை அறிவேன். சமூக வலைதளங்களில் என் பெயரை சிலருடன் இணைத்துப் பேசியபோது அமைதியாக இருந்தேன்.ஆனால், சுயமரியாதை முக்கியம். ‘
stop என்பது சக்திவாய்ந்த வார்த்தை. அதை இப்போது பயன்படுத்துவது சரியாக இருக்கும் என நம்புகிறேன். இந்த செய்தி உண்மையா என்று கூட யாரும் எனக்கு போன் செய்து கேட்கவில்லை.
என்னுடைய உணர்ச்சிகள் பற்றி யாருக்கும் கவலையில்லை.இதுபோன்ற வதந்தி பரப்புவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். என்னைப் பற்றி வதந்திகளைப் பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.