Patanjali apologize ad : தவறான விளம்பரங்களை வெளியிட்டதாக, பதஞ்சலி நிறுவன இணை நிறுவனர் பாபா ராம்தேவ்-க்கு எதிரான வழக்கில், பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட விளம்பரத்தை லென்ஸ் வைத்து தேட வேண்டியுள்ளது – நீதிபதிகள் அதிருப்தி
பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் ‘பதஞ்சலி’ நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என்று எச்சரித்த உச்ச நீதிமன்றம், இந்த புகாரில் பதிலளிக்க கோரி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் உச்ச நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு பதஞ்சலி நிறுவனம் பதிலளிக்காததால், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவை நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த 16ம் தேதி மீண்டும் நடைபெற்ற போது எங்களுடைய கருத்துகள், செய்த தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க வேண்டும் என்று பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தனர்.
அப்போது, மற்ற மருந்து முறைகளை இழிவுபடுத்த உங்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்?; நிரூபணமற்ற அலோபதி மருந்து விளம்பரங்களை எங்காவது பார்த்துள்ளீர்களா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதைத் தொடர்ந்து தங்கள் நிறுவனத்தின் விளம்பரங்களை வெளியிடுவதில் மாற்றங்கள் செய்வதாக பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளித்த நிலையில், பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் பொது மன்னிப்பு கோர உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்று ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
முன்னதாக, நேற்று (22-04-24) நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு பாபா ராம்தேவ் பொது மன்னிப்புக் கோரி இருந்தார்.
இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் மீதான வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற போது, நேற்று நாளிதழ்களில் வெளியிடப்பட்ட பொதுமன்னிப்பு கோரும் விளம்பர நகலை பதஞ்சலி நிறுவன வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
அதனை பார்த்த நீதிபதிகள், “மன்னிப்பு கோரும் விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு சிறிதாக உள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இது போன்ற சிறிய அளவில்தான் வெளியிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.
உங்கள் நிறுவனத்தின் பொருளை விளம்பரப்படுத்துவது போல, மன்னிப்பும் மிகப்பெரிய அளவில் புதிய விளம்பரமாக வெளியிட்டு அதை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற ஏப்ரல் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் Patanjali apologize ad