சமூக வலைதளத்தில் சிலர் தாங்கள் சொல்லும் கருத்தின் விபரீதத்தை உணராமல் பதிவிடுகிறார்கள் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் வேதனை தெரிவித்துள்ளார்.
ஷார்ஜாவில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோற்கடித்தது . இதில் ஆர்சிபி ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன் வீசிய ஒவரில்தான் நரேன் 22 ரன்கள் குவித்து கொல்கத்தா வெற்றிக்கு வழிவகுத்தார்.
இதனால் கோபமடைந்த ஆர்சிபி ரசிகர்கள் சிலர், டேனியல் கிறிஸ்டியனின் காதலி ஜோர்ஜியா டானுக்கு எதிராகப் பல கொச்சையான அவதூறு கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், ஆர்சிபி வீரர் மேக்ஸ்வெலும் இதைக் கண்டித்து பதிவிட்டிருந்தார்.
ஆர்சிபி அணி வீரர்களுக்கு ஆதரவாக கொல்கத்தா அணியும் கருத்துகளை பதிவிட்டிருந்தது. இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பரும், தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவில் வேதனை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் “சமூக வலைதளங்கள் இரக்கமுள்ள, கருணையுள்ள இடமாக மாற வேண்டிய தேவையிருப்பதாக நான் உணர்கிறேன். அது மீம்ஸ்கள், வீடியோஸ், வார்த்தைகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சிலர் தாங்கள் பேசும், பதிவிடும் வார்த்தைகள், கருத்துகளின் விபரீதத்தை உணர்வதில்லை.
அது அவர்களுக்கு வேண்டுமானால் உற்சாகமான தருணமாக இருக்கும். தங்களுடைய கருத்தைப் பதிவிட்டுவிட்டதாக மட்டும் உணர்கின்றனர். ஆனால் இந்தச் செயலால், குறிவைக்கப்பட்டவர் என்ன விளைவுக்கு ஆளாகுவார் என்பதை கருத்தைப் பதிவிட்டவர் உணர்வதில்லை” என மிகவும் வேதனையோடு தெரிவித்துள்ளார்.