தே.மு.தி.க தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தே.மு.தி.க. தலைமை அலுவலகம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மரணம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
அவரது இரங்கல் செய்தியில், “எனது இனிய நண்பர் விஜயகாந்த் அவர்களை உயிரோடு இருக்கும்போதே சந்தித்து ஆரத் தழுவி, கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அதற்காக நான் இரண்டு ஆண்டுகள் முயற்சியும் செய்தேன். ஆனால் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.
அவரது உயிரற்ற உடலை நான் பார்க்கக் கூடாது என்று கடவுள் நினைத்தாரோ என்னவோ நான் அவரைப் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறேன். இந்த நாளில் நான் துபாயில் இருக்கிறேன்.
திரையுலகிலும் சரி அரசியல் உலகிலும் சரி அவர் சகாப்தம் படைத்தவர். அந்த சகாப்தம் இன்றுடன் முடிந்து விட்டது. இந்த நிலையில் கண்ணீர் சிந்துவதைத் தவிர எனக்கு வேறு மொழி தெரியவில்லை. அவர் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அஞ்சலியுடன் அவரது ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
‘செந்தூரப்பாண்டி’, ‘ராஜதுரை’, ‘ராஜநடை’ என விஜயகாந்தை வைத்து பல ஹிட் படங்களை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கி இருந்தார்