DMK-Congress seat allocation confusion : ஒரு வழியாக காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்த பட்டியல் இன்று வெள்யிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை ஆரம்பத்தில் இழுபறியாக இருந்த போது, காங்கிரஸ் மேலிட அழுத்தம் காரணமாகவே கடந்த முறை ஒதுக்கப்பட்ட அதே எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
கடந்த 2019 மக்களவை தேர்தலில், திருவள்ளூர், ஆரணி, கிருஷ்ணகிரி, திருச்சி, கரூர், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி என தமிழகத்தில் உள்ள 9 தொகுதிகளிலும், பாண்டிச்சேரியிலும் திமுக கூட்டணியில் போட்டியிட்டது காங்கிரஸ்.
அப்போது தேனி தவிர அனைத்து இடங்களையும் வென்ற காங்கிரஸ் இம்முறையும் தாங்கள் ஏற்கனவே போட்டியிட்ட அதே தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது.
ஆனால், திமுகவின் ரகசிய கள ஆய்வு டீமோ, திருச்சி, கரூர், தேனி மற்றும் ஆரணி மற்றும் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு நெகடிவ் ரிப்போர்ட் காட்டியதால், அந்த தொகுதிகளுக்கு பதிலாக வேறு தொகுதிகளை கேட்டு பெறுமாறு காங்கிரஸ் கட்சிக்கு அறிவுறுத்தி இருந்தது.
ஆரணிக்கு பதிலாக கடலூர் மற்றும் திருச்சிக்கு பதிலாக மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளை காங்கிரஸ் பரிந்துரை செய்திருந்த நிலையில் அதற்கு ஓ.கே. சொல்லி விட்டது திமுக.
அதே போல, தேனி மக்களவை தொகுதிக்கு பதிலாக நெல்லை அல்லது வேறு ஏதாவது தென் மாவட்ட தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையையும் திமுக ஏற்றுக் கொண்ட நிலையில், ஜோதிமணியின் பிடிவாதம் காரணமாக கரூர் தொகுதியை விட முடியாமல் தவிக்கிறது காங்கிரஸ்.

அதே போல, விருதுநகர் மக்களவை தொகுதிக்கு பதிலாக வேறு தொகுதிகளை பெற்றுக் கொள்ளுமாறு கூறிய திமுகவின் கோரிக்கையையும் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த காரணங்களால் மட்டுமே காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த பட்டியல் வெளியாவதில் தாமதம் நீடித்துக் கொண்டே வந்தது.
இதையும் படிங்க : போதைப்பொருள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தவறிய தமிழக அரசு – ஈபிஎஸ் கண்டனம்!
இந்நிலையில் தான், தமிழகத்தில் இறுதி செய்யப்பட வேண்டிய தொகுதிப் பட்டியல் மகாராஷ்டிராவில் வைத்து இறுதி செய்யப்பட்டதாக கூறுகின்றனர் சத்யமூர்த்தி பவனுக்கு நெருக்கமான சிலர். இது குறித்து நம்மிடம் பேசிய அவர்கள்,
“கடந்த 2022 ஆம் ஆண்டு ‘பாரத ஒற்றுமை யாத்திரை’யை செப்டம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கி சுமார் 4 ஆயிரம் கி.மீ. தூரம் நடந்தே சென்று 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் ஸ்ரீநகரில் நிறைவு செய்தார் ராகுல் காந்தி.
இந்நிலையில், ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’ என்ற பெயரில் 2 ஆவது கட்ட யாத்திரையை கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மணிப்பூரில் இருந்து மும்பையை நோக்கி தொடங்கினார் ராகுல்.
பல்வேறு மாநிலங்கள் வழியாக 63 நாட்கள் பயணித்த அந்த யாத்திரையின் நிறைவு விழாவானது நேற்று (17.03.2024) மாலை மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் நடைபெற்றது.
மும்பையில் எடுத்த முடிவு :
‘இந்தியா’ கூட்டணில் கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்ட அதில், திமுக தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டார். அப்போது, தலைவர்கள் மேடைக்கு வருவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் ஸ்டாலினும் நேரில் சந்தித்து பேசினார்கள்.
அப்போது, காங்கிரஸ் கேட்கும் விருப்பத் தொகுதிகள், திமுக அதை ஒதுக்காத காரணம் குறித்த விசயங்கள் பேசப்பட்டன. அதில் தான் கிட்டத்தட்ட ஒரு முடிவு வந்துள்ளது.

ஆனாலும், கரூர் மற்றும் விருதுநகர் ஆகிய தொகுதிகளை மட்டும் விட்டுக் கொடுக்க காங்கிரஸும், அதை மீண்டும் ஒதுக்குவதற்கு திமுகவும் ஒப்புக் கொள்ளவில்லை.
இருந்தாலும், இன்று மாலைக்குள் இறுதி முடிவு எடுக்கப்பட்டு காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படும்” என நம்பிக்கை தெரிவித்தனர் அவர்கள்.
காரணம் என்ன?
கரூர் எம்.பி. ஜோதிமணி பிரியங்காவுக்கு நெருக்கமாக இருப்பதாலும், விருதுநகர் தொகுதி மாணிக் தாகூரின் தந்தை சோனியா காந்தியின் உதவியாளர்களில் ஒருவராகவும், மாணிக் தாகூர் நேரடியாகவே ராகுல் காந்திக்கு நெருக்கம் என்பதாலும் காங்கிரஸ் மேலிட்த்தின் மூலமாகவே அவர்கள் திமுகவுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும்,
ஆனால், கையில் உள்ள சர்வே ரிப்போட்டின் அடிப்படையில் அந்த இரு தொகுதிகளையும் மீண்டும் காங்கிரஸுக்கு ஒதுக்க திமுக மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
திமுகவின் விருப்பம் :
கரூர் தொகுதியில் இம்முறை திமுகவே நேரடியாக போட்டியிட விரும்புவதாகவும், ஒரு வேளை அது சாத்தியப்பட்டால், கே.என்.நேருவின் மகன் அருண் நேருவுக்கு பெரம்பலூர் தொகுதிக்கு பதிலாக கரூரை ஒதுக்கலாம் என திமுக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதே போல, ஆரம்பத்தில் சிவகாசி மக்களவை தொகுதியாக இருந்த போதும் சரி, பின்னர் தொகுதி மறுசீரமைக்குப் பிறகு விருதுநகர் மக்களவை தொகுதியாக மாறிய போதும் சரி திமுக அங்கு நேரடியாக போட்டியிட்டது கிடையாது.
எனவே, கடந்த முறையே காங்கிரஸுக்கு பதிலாக அதை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் எனவும், திமுகவே நேரடியாக அங்கு போட்டியிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், காங்கிராஸுக்கு ஒதுக்கப்பட்ட அந்த தொகுதியில் மாணிக்கம் தாகூர் 2 ஆவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை, வைகோவும் அதே தொகுதியை குறி வைப்பதாலும், மாணிக்கம் தாகூர் மீது நெகடிவ் ரிப்போர்ட் இருப்பதாலும், அதை மீண்டும் காங்கிரஸுக்கு ஒதுக்க மறுகிறது திமுக.

எப்படியும் இன்று மாலைக்குள் தொகுதிப் பட்டியல் வெளியாகும் என எதிர்பாக்கப் படுவதால், அதில், “வெற்றி பெற்றது காங்கிரஸ் வேட்பாளர்களின் பிடிவாதமா அல்லது திமுகவின் முடிவா?” DMK-Congress seat allocation confusion என்பது தெரிந்து விடும்.