திமுக ஆட்சியில் தொழில்துறையில் எவரெஸ்ட் சிகரத்தை தொடும் அளவுக்கு சாதனைகளை படைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறி வந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்டிருக்கும் இந்த புள்ளி விவரங்களின் மூலம் உண்மை நிலை அம்பலமாகியுள்ளது என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
“தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 46 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. திமுக ஆட்சியில் தொழில்துறையில் எவரெஸ்ட் சிகரத்தை தொடும் அளவுக்கு சாதனைகளை படைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறி வந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்டிருக்கும் இந்த புள்ளி விவரங்களின் மூலம் உண்மை நிலை அம்பலமாகியுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கும் கூடுதலாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன; அதன் மூலம் 891 தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதுடன் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் முதலமைச்சர் தொடர்ந்து கூறி வந்தார். முதலமைச்சர் தெரிவித்த புள்ளிவிவரங்கள் சரியானவை என்றால், வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், வெள்ளை அறிக்கை வெளியிட மறுத்து வந்த திமுக அரசு, தொழில் முதலீடுகள் குவிந்து வருவது உண்மை என்பதை மட்டும் திரும்பத் திரும்ப கூறி வந்தது.
கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. இராஜா வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் இதுவரை கையெழுத்திடப்பட்ட 891 தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 535 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு விட்டன; அவற்றில் 234 திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்கி விட்டதாகவும், 301 தொழில் திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தார். ஆனால், திமுக அரசு நேற்று வெளியிட்ட சாதனை அறிக்கையில் புள்ளிவிவரங்கள் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளன. இது தான் திமுக அரசின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தியுள்ளன.
2021-&ஆம் ஆண்டுக்குப் பிந்தைய 3 ஆண்டுகளில் கடந்த ஆகஸ்ட் 21-&ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.17,616 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட 19 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதாக அரசு கூறியிருக்கிறது. இது உண்மை. ஆனால், அதற்கு முன்பாக 27 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதாக அரசு கூறியிருப்பது மோசடி. அந்தத் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை அதிமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் மூலம் அமைக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் இருந்தவை. அவை திமுக ஆட்சியில் முதலீடு ஈர்க்கப்பட்டவையாக இருந்தால் அவற்றின் மதிப்பு என்ன? அந்தத் தொழிற்சாலைகளை எங்கெங்கு அமைக்கப்பட்டுள்ளன? என்ற விவரங்களை திமுக அரசு வெளியிட்டிருக்கலாம். ஆனால், அந்த விவரங்களை வெளியிடவில்லை. இதன் மூலம் தனது மோசடியை திமுக அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க : சென்னையில் வைரஸ் காய்ச்சல் : ஆன்டிபயாட்டிக் மருந்து மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு?
ஒரு வாதத்திற்காக கடந்த மூன்றாண்டுகளில் தொடங்கப்பட்ட 46 தொழிற்சாலைகளுமே திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்று வைத்துக் கொண்டாலும் கூட, திமுக சாதித்து விட்டதாக கூறும் உயரத்திற்கும், உண்மையில் எட்டப்பட்ட உயரத்திற்கும் இடையிலான வித்தியாசம் மிக அதிகமாகும். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. இராஜா கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி தமிழ்நாட்டில் உற்பத்தியை தொடங்கி விட்ட திட்டங்களின் எண்ணிக்கை 234. ஆனால், அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி திறக்கப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 46 மட்டுமே. அதாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட 891 திட்டங்களில் 5% மட்டுமே நிறைவேறியுள்ளது.
அதேபோல், சென்னையில் கடந்த ஆகஸ்ட் 21&ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 28 மட்டுமே. அதன்பிறகு செப்டம்பர் 28&ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் டாட்டா நிறுவனத்தின் ஜாகுவார் மகிழுந்து ஆலையை முதலமைச்சர் அடிக்கல் நாட்டி வைத்தார். அதையும் சேர்த்தால் தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் புதிதாக அடிக்கல் நாட்டப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 29 மட்டும் தான். ஆனால், 301 தொழில்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி இராஜா கூறியிருக்கிறார். அமைச்சரின் கூற்று அப்பட்டமான பொய் என்பதைத் தவிர வேறில்லை.
தமிழ்நாட்டுக்கு ஈர்க்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் கோடி தொழில் முதலீடுகளின் மூலம் 31 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். தமிழக அரசு பெருமை கொள்வது போன்று 60% தொழில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் 18.60 லட்சம் பேருக்கு தனியார் தொழிற்சாலைகளில் வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசின் சார்பில் கடந்த செப்டம்பர் 20&ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கையில் ( செய்தி வெளியீடு எண்:1481) தனியார் நிறுவனங்களில் 5 லட்சத்து 8,055 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழக அரசே நேற்று வெளியிட்ட அறிக்கையில் 46 தொழிற்சாலைகள் மூலம் ஒரு லட்சத்து 39,725 பேருக்கு வேலை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 தகவல்களில் எது உண்மை?
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தொழில் திட்டங்களின் எண்ணிக்கை 500% உயர்த்திக் கூறுகிறார் அமைச்சர். அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கையை 1000%க்கும் கூடுதலாக உயர்த்திக் கூறுகிறார் தொழில்துறை அமைச்சர். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தொழில் முதலீடுகளைக் கொண்டு தமிழ்நாட்டை வளர்க்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை; மாறாக, பொய் முதலீடுகளைக் கொண்டு தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்வதில் மட்டும் தான் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது. இந்த பொய்களை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள்.
ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்களை சொல்ல வேண்டியிருக்கும் என்பார்கள். தமிழக அரசும் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறது. பொய்களால் கட்டப்பட்ட கோட்டை நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. எனவே, தமிழக அரசு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து இருந்தால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் படுதோல்வி அடைந்து விட்டதை ஒப்புக்கொண்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.” என கூறியுள்ளார்.