தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை DMK GOVT ஒருபோதும் அனுமதிக்காது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் #CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர்.
இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான #CAB சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததுதான்.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன்
இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது கழகம்.
2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே #CAA-வைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம்.
தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் DMK GOVT ஒருபோதும் அனுமதிக்காது.
மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் #CAA கால்வைக்க விடமாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேபோல் குடியுரிமைச் சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை ஒரு வாரத்துக்குள் அமல்படுத்துவோம் என ஒன்றிய இணை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மத அடிப்படையிலும் – இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்த மசோதாவை ஏற்கனவே கிழித்து எறிந்த மக்கள், இம்முறை அதனை அமல்படுத்தத் துடிக்கும் பாசிஸ்ட்டுகளையும் தூக்கி எறிவார்கள்.
அடிமைகளின் உதவியோடு கொண்டு வரப்பட்ட மானுட விரோத குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை, தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த விட மாட்டோம் என்று நம் முதலமைச்சர் அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளார்கள்.
Also Read : https://itamiltv.com/chennai-corp-in-financial-crisis-o-panneerselvam/
பாசிஸ்ட்டுகளால் எப்படி தமிழ்நாட்டுக்குள் அடியெடுத்து வைக்க முடியவில்லையோ, அதேபோலக் குடியுரிமைத் திருத்தச்சட்டத்தாலும் தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேபோல் குடியுரிமை சட்டம் குறித்து பலர் ஆதரவு தெரிவித்தும் பலர் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.