மதுரை மாநகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு அதிமுக மாமன்ற உறுப்பினர்களுடன் மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் காலோனிடம் கோரிக்கை மனு அளித்தார்,
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில் “மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது, 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது,
சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால் தொற்று நோய்கள் பரவுகிறது, மதுரை மாநகராட்சியில் மக்கள் தொகைக்கு ஏற்ப பாதாள சாக்கடை பணிகள் நடைபெறவில்லை, மதுரை மாநகராட்சி வரி வருவாயை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த அம்ரூத் குடிநீர் திட்டத்தால் குடிநீர் தட்டுப்பாடு வராது, மதுரையில் ஒராண்டில் திமுக எந்தவொரு திட்டமும் செய்யவில்லை, மதுரையில் புதிய திட்டத்திற்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை.
கலைஞர் நூலகம் தவிர எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை, அதிமுக காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை திமுக தற்போது திறந்து வைத்து வருகிறார்கள், அதிமுக உறுப்பினர்கள் வெற்றி பெற்ற வார்டுகளில் தூய்மை பணிகள் நடைபெறவில்லை, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விரைவில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என கூறினார்