Annamalai Nomination Filing : கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது.
25ஆம் தேதி பங்குனி உத்திர நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் சுயேட்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 26ஆம் தேதி நிலவரப்படி 600க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தமிழகம் எங்கும் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான இன்றும் வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை தாக்கல் செய்தனர். கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் Annamalai Nomination Filing.
இதையும் படிங்க : என்.எல்.சியை வெளியேற்றுவதாக பா.ம.க தேர்தல் அறிக்கை!
முன்னதாக, கோவையில் உள்ள கோனியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், பா.ஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி,
கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். தொடர்ந்து உறுதிமொழியையும் வாசித்து கையெழுத்திட்டார்.
இதன்பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, கோவை மக்கள் அனைவரும் தன் மீது அன்பை பொழிவதாகக் கூறினார். கோவையில் ஆதிக்கம் செலுத்திவந்த சக்திகளுடன் தான் பா.ஜ., போட்டியிடுவதாக தெரிவித்தார்.
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பா.ஜ., எம்எல்ஏ வானதி சீனிவாசன் சட்டசபையில் 4 முறை பேசியுள்ளார், மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு 3 முறை கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால், கோவை நகர் வளர்ச்சி அடையக்கூடாது என மாநில அரசு கங்கணம் கட்டி வருகிறது. கோவை வளர்ச்சிக்கு திமுக.,வும், மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.,யும் தடைக்கல்லாக இருந்ததாக குற்றம் சாட்டினார். தொழில்துறையினரின் கோரிக்கையை கோவை எம்.பி., பேசியிருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பினார்.
கோவை காவல் தெய்வம் கோனியம்மனை வணங்கிவிட்டுதான் வேட்புமனு தாக்கல் செய்தேன். இந்த வேண்டுதல், கோவையில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இல்லை… கோவை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று தெரிவித்தார்.
கரூரில் இருந்து கல்லூரி படிக்க வந்தபோது, கோவை தான் என்னை பக்குவப்படுத்தியது. இங்குள்ள 60 சதவீத மக்கள் எங்களுக்கு ஓட்டளிப்பார்கள். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் என்ஐஏ காவல் நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்தது குறித்து தனது ட்விட்டர் தளத்திலும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில்,
ஒருங்கிணைந்த வளர்ச்சியும், மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் திட்டங்களைக் கொண்டு வருவதும், கோவையின் சுற்றுச் சூழலை மீட்டெடுப்பதும் எங்கள் முக்கிய நோக்காக இருக்கிறது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, 400 தொகுதிகளுக்கு அதிகமாக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும் போது,
கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துத் தொகுதி பொதுமக்களும், கட்சி வேறுபாடின்றி, நமது பாரதப் பிரதமருக்குத் தங்கள் ஆதரவை நிச்சயம் வெளிப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.