திமுக கட்சித் தலைமை எம்.பி. ஞான திரவியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 7 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லை திருமண்டல சிஎஸ்ஐ டயோசீசன் அலுவலக வளாகத்தில் நேற்று இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பிஷப்பின் ஆதரவாளர் மத போதகர் காட்பிரே நோபிள் என்பவர் திமுக எம்பி ஞானதிரவியம் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார்.
இது தொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீப் போல் பரவின. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் ஞான திரவியம் எம்.பி. மீதும் குற்றஞ்சாட்டுகள் எழுந்தன.
திமுக எம்பி ஞான திரவியம் மற்றும் லே செயலாளர் ஜெயசிங் மற்றும் சொத்து நிர்வாக அதிகாரி மூன்றடைப்பு ஜான், ஆடிட்டர் மைக்கேல் உட்பட 33 பேர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத போதகர் கார்பரே நோபில் அளித்த புகாரின் அடிப்படையில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் திமுக எம்பி ஞான திரவியம் மீது 147, 294 b, 323, 109, 506( 1) என 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் திமுக தலைமை எம்.பி. ஞான திரவியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அனுப்பியுள்ள அந்த நோடடீஸில், “நெல்லை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஞானத்திரவியம் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளன.
இந்தப் புகார் குறித்த விளக்கத்தினை 7 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.