நீலகிரியில் உலவும் புலியை கொல்ல வேண்டாம் என வனத்துறையை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில்டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி கொன்றுள்ளது. இந்நிலையில் குறித்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒருவாரத்திற்கும் மேலாக புலியை பிடிக்க முயன்றும் முடியாத நிலையில் புலியை வேட்டையாடி பிடிக்க தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவரும், இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பும் அவசர வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளை பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில் டி.23 புலியை ஆட்கொல்லி புலியாக கருதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்துவிட்டு, பின்னர் புலியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர வேண்டுமென மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு வனத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் புலியை கொல்லும் திட்டம் இல்லை என்றும், அதை உயிருடன் பிடிக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் கழுத்தில் ஏற்கனவே காயம் உள்ளது தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், அந்த புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமல் கூட இருக்கலாம் என்பதால், அதை உடனடியாக கொல்ல முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.