எறும்பு என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது அதன் சுறுசுறுப்புத் தன்மையும் வலியும் வீக்கமும் தான். பொதுவாக நம்மை எறும்பு கடித்தால் உடனே நாம் கடுப்பாகி வலி தாங்க முடியாமல் ‘இப்போ பாரு அந்த எறும்ப சட்னியாக்குறேன் என்று கூறி அதனை நசுக்கி தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கடியெறும்புகளை உண்மையாகவே சட்டினி ஆக்கி சாப்பிடும் ஊர் எது என கேட்டால் அது ஒடிஷா தான் என்ற செய்தி வியப்பை அளிக்கிறது.
இந்த சட்டினி ஆனது ஒடிஷா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் என்ற மலைப்பகுதியில் காணப்படும் கை என்ற ஒரு வகை நெசவு செவ்வெறும்பில் இருந்து உருவாக்கப்படுகிறது. இந்த வகையான எறும்புகள் தான் வாழும் மரத்தின் இலைகளைக் கொண்டு நெய்து ஒரு வீட்டை அமைக்கிறது. அதனுள் தன் வாரிசுகளை வளர்க்கிறது. இதனால் தான் இவை நெசவுசெவ்வெறும்புகள் என அழைக்கப்படுகின்றன.
இந்நிலையில் மயூர்பஞ்ச் மலைப்பகுதியில் வாழும் பழங்குடியினர் இந்த எறும்புகளை வைத்து துவையல் செய்து உண்டு வருகின்றனர். இந்த துவையலானது எறும்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய், உப்பு ஆகியவற்றை வைத்து அரைத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த துவையலை உண்பதன் மூலம் புரதம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் , ஜிங்க், தாமிரம், விட்டமின் பி-12 மற்றும் அமினோ ஆசிட்டுகள் கிடைப்பதாகவும் இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இதன் மருத்துவ குணங்களை கருத்தில் கொண்டு மயூர்பஞ்ச் பழங்குடியினர் காய்ச்சல், ஜலதோஷம், இருமல் போன்றவற்றில் இருந்து விடுபடவும் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் இந்த துவையலை உட்கொண்டும் சந்தையில் விற்பனை செய்தும் வருகின்றனர்.ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் இந்த துவையலை உட்கொண்டும் சந்தையில் விற்பனை செய்தும் வருகின்றனர்.
இத்தனை மருத்துவ குணங்களும் ,மலைவாழ் மக்களின் பிரதான தொழிலாகவும் விளங்கக் கூடிய இந்த எறும்புச் சட்டினியின் உற்பத்தியை அதிகரித்து அதற்கு புவிசார் குறியீடு பெற ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.