மாவட்ட ஆட்சியர் உடனடியாக நீர்நிலையான சித்தேரியை தனியார் நில நிறுவனத்திற்கு வழங்கியுள்ள பட்டாவை ரத்து செய்ய வேண்டும். மாறாக, தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டால், மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..
“சென்னையை அடுத்த காயரம்பேடு கிராமத்தில் உள்ள வேளாண் பயன்பாட்டுக்கான, சித்தேரியை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்யும் முயற்சியில் தனியார் நில வணிக நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, சம்பந்தப்பட்ட ஏரியை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்க வருவாய்த்துறை அதிகாரிகளும் துணைபோவது கண்டிக்கத்தக்கது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட காயரம்பேடு கிராமம் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட கிராமம் ஆகும். அதனால், காயரம்பேட்டில் ஏரிகளும், அவற்றுக்கு நீர் கொண்டு செல்லும் கால்வாய்களும் உண்டு. சென்னை நகரின் வளர்ச்சி காரணமாக காயரம்பேடு கிராமத்தில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதிலுமிருந்து காயரம்பேடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் முகாமிட்டுள்ள நில வணிக நிறுவனங்கள். அங்குள்ள நிலங்களை கொத்துக்கொத்தாக வாங்கி வீட்டு மனைகளாக மாற்றியமைத்து விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அத்தகைய நிறுவனங்களில் ஒன்றுக்கு தான் 21 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியை தாரைவார்க்கும் சதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிமாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிலவணிக நிறுவனம் ஒன்று, காயரம்பேடு கிராமத்தில் புல எண் 370-இல் உள்ள சுமார் 100 ஏக்கர் புன்செய் நிலங்களை விலைக்கு வாங்கியிருக்கிறது. அதை ஒட்டி, புல எண் 430-இல் சித்தேரி தாங்கல் என்ற ஏரி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த ஏரியின் கரைகளை உடைத்து. சமன் செய்யும் பணியில் சம்பந்தப்பட்ட நில வணிக நிறுவனம் ஈடுபட்டிருந்தது.
பாசன ஆதாரமாக திகழும் ஏரியின் கரைகளை தனியார் நிறுவனம் எவ்வாறு சமன்படுத்த முடியும்? என்ற எண்ணத்தில் விசாரித்தபோது, சித்தேரி தாங்கலை அந்த நிறுவனத்திற்கு செங்கல்பட்டு மாவட்ட வருவாய்த்துறையினர் பட்டா போட்டு கொடுத்திருப்பது தெரியவந்திருக்கிறது.
1989 வரையிலான நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களில் ஏதேனும் திருத்தம் செய்து பட்டா வழங்குவது யு.டி.ஆர் பட்டா (Updating Data Registry) என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில் தான் தனியார் நிறுவனத்திற்கு சித்தேரி அமைந்துள்ள 21 ஏக்கர் நிலம் பட்டா செய்து வழங்கப்பட்டுள்ளது. சித்தேரி தாங்கலுக்கு நீர் வருவதற்கான கால்வாய்கள் இன்றும் உள்ளன.
சித்தேரி நிரம்பினால் அதிலிருந்து வழியும் கூடுதல் நீர் அருகிலுள்ள காயரம்பேடு பெரிய ஏரிக்கு செல்வதற்கான கால்வாய்களும் இப்போதும் உள்ளன. அவ்வாறு இருக்கும் போது கடந்த சில ஆண்டுகளுக்கு
தனியார் நிறுவனம் விலை கொடுத்து வாங்கிய நிலங்களை வீட்டு மனையாக்கி விற்பனை செய்ய எதிர்ப்பு இல்லை: ஆனால், 21 ஏக்கர் ஏரி நிலத்தில் வீட்டு மனைகள் அமைக்க அனுமதிக்கக்கூடாது என்று காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்களும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பின்னர் காயரம்பேடு கிராமத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்த பிறகு தான் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. ரூ.200 கோடி மதிப்பும், 21 ஏக்கர் பரப்பும் கொண்ட நீர்நிலையான சித்தேரியை தனியார் நில நிறுவனம் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது.
இந்த சிக்கலை முழுமையாக அறிந்திருக்கும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்ய வேண்டும். மாறாக, தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டால், மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.