கடந்த இரு வாரங்களுக்கு முன்பே, ‘இன்று முதல் துவங்குகிறது கூட்டணி பேச்சு வார்த்தை’ என டைட்டில் கார்டு போட்டு காலை முதல் மாலை வரை ராயப்பேட்டை அலுவகத்தில் காத்திருந்தும் பா.ம.க., தே.மு.தி.க. மட்டுமல்லாமல் சிறிய கட்சிகள் கூட எட்டிப்பார்க்காததால் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலின் முதல் ஏமாற்றத்தை சந்தித்த அதிமுக இன்னமும் அதிலிருந்து விடுபடவில்லை என்பதே தற்போதைய நிலை.
தற்போது புதிய தமிழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. போன்ற சிறிய கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணிக்கு தயாராக இருப்பதாக கூறப்படும் நிலையில், பா.ஜ.க.வை விட்டு தனித்து நிற்கும் அதிமுகவின் குறி தேமுதிக மற்றும் பாமக ஆகியவைதான். ஆனால், இந்த 2 கட்சிகளுமே போட்டியிட விரும்பும் தொகுதிகளையாவது கொடுத்து சமாளித்து விடலாம் என்றாலும்,
‘ராஜ்ய சபாவிலும் ஒரு சீட் வேணும்’ என்ற அவர்களின் கோரிக்கைக்கு விடை தெரியாமல் திண்டாடுகிறது அதிமுக. அதே நேரத்தில், சமீபத்தில் தமிழகம் வந்த மோடி, மீண்டும் 4ஆம் தேதியும் இங்கு வரவிருப்பதால் கடந்த முறையைப் போல இல்லாமல் இந்த முறை, கூட்டணிக் கட்சித்தலைவர்களின் கைகளை உயர்த்திப் பிடித்து மேடையில் போஸ் தர வைக்க வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க.வும் இருப்பதால் பா.ம.க., தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு அப்போதையும் விட இப்போது டிமாண்ட் அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
இதில், அந்த இரு கட்சிகளும் கேட்கும் தொகுதிகளை எப்படியோ கூட்டிக்குறைத்து கொடுத்து விடலாம் என முடிவெடுத்திருக்கும் பா.ஜ.க., சமீபத்தில் எல்.முருகனை தங்கள் மத்திய பிரதேசத்திலிருந்து எம்.பி.யாக்கி பாராளுமன்றம் அனுப்பியது போல, தேமுதிக, பாமக ஆகிய இரு கட்சிகளுக்கும் அதே வழிமுறையை பின்பற்ற எப்போதோ தயாராகி விட்டது,
இதனால், தேமுதிகவை பொறுத்த வரை பா.ஜ.க.வின் பக்கம் சாய்வதற்கு வாய்ப்பு அதிகம் இருந்தாலும், பாமகவை பொறுத்த வரை அன்புமணியை தவிர ராமதாசும், ஜி.கே. மணியும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதையே அதிகம் விரும்புவதாக கூறப்படும் நிலையில், அவர்கள் கேட்கும் ராஜ்யசபா சீட்டை தர வாய்ப்பில்லாமல் தினறுகிற்து அதிமுக.
இதையும் படிங்க: ”உதயசூரியன் சின்னத்தில் ரவிக்குமார்..” விசிகவினர் கடும் எதிர்ப்பு..காரணம் ?
தற்போது இப்பிரச்சனை அதிமுக வட்டாரத்தின் பிளட் பிரஸ்ஸரை அதிகரித்து வரும் நிலையில், கட்சியின் உள்விவகாரம் அறிந்த முக்கியப்புள்ளிகள் சிலரிடம் பேசினோம் நாம். “அவ்வப்போது புதுரத்தம் பாய்ச்ச நினைக்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும் மூத்த உறுப்பினர்கள் சிலருக்கு தேர்தலில் போட்ட்டியிட வாய்ப்பு தரப்படாத நிலையில், அவர்களை திருப்திப் படுத்துவதற்காக ராஜ்யசபா சீட்டை தருவது வழக்கம்.
அப்படி செய்தால் மட்டுமே பேலன்ஸ் பன்ன முடியும். அதே நேரத்தில், கட்சியின் கொள்கைகளில் ஊறிப்போயிருக்கும் அந்த மூத்த உறுப்பினர்கள் தேவைப்படும் நேரங்களில் எல்லாம் பாராளுமன்றத்தில் அக்கட்சியின் கொள்கைகளை எதிரொலிப்பார்கள்.
அதையும் மீறி 2019இல் அன்புமணியை எம்.பி.யாக்கி ராஜ்யசபாவிற்கு அனுப்பினோம். ஆனால், அவரது பதவிக்காலம் 2025வரை இருந்தபோதும் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியது பாமக. தற்போது மீண்டும் கூட்டணிக்கு வரவேண்டுமென்றால் ராஜ்யசபா சீட்டு கேட்டு வலியுறுத்துகிறார்கள். அதே போல, இதுவரை பாராளுமன்றத்தின் பக்கம் எட்டியே பார்க்காத தேமுதிகவும் ராஜ்யசபா சீட்டை எதிர்பார்க்கிறது.
எனவேதான், “அவர்கள் கேட்கும் தொகளில் அவர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கூட கொடுத்து விடுங்கள். கூடவே, ஸ்வீட் பாக்ஸ் வேண்டுமானாலும் தரலாம். ஆனால், ராஜ்யசபா சீட்டை மட்டும் தாரை வார்த்து விடாதீர்கள்” என கட்சித்தலைமைக்கு வலியுறுத்தியுள்ளோம்.
அதையும் மீறி ஏதாவது நடந்தால், ‘வரவிருக்கும் தேர்தலில் வெற்றி தோல்விக்கு நாங்கள் பொறுப்பல்ல’ என சூசகமாகவும் கூறிவிட்டோம். தலைமை நல்ல முடிவெடுக்கும் என நம்புகிறோம்” என்றனர் அவர்கள்.