காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ள நிலையில் அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமாகி உள்ளார்.
இந்நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் :
காங்கிரஸ் கட்சியின் கொள்கையை, அச்சமின்றி பரப்பும் ஒப்பற்ற தலைவர் இளங்கோவன்; பெரியாரின் சிந்தனையை சீரிய முறையில் எடுத்துச் சென்றவர் என ஈவிகேஎஸ் இளங்கோவனை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் :
அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர், அனைவராலும் போற்றப்படுபவர்; பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த நண்பர்; எப்போதும் தன் மனதில் பட்டதை பேசக்கூடிய பண்புக்குச் சொந்தக்காரர்
திருமகன் ஈவெரா இறந்ததில் இருந்தே மனதளவில் உடைந்து போயிருந்தார் இளங்கோவன் மறைவு அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் மிகவும் வேதனை தருகிறது; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது என்னை சந்திக்க வேண்டும் என்றார் மருத்துவமனை சென்று நான் சந்தித்த போது பேசும் நிலையில் அவர் இல்லை என ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள செய்தியில் :
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்; அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்தியில் :
அனைவராலும் தன்மானத் தலைவர் என்று போற்றப்பட்டவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்; எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு; எதையும் வெளிப்படையாக பேசுபவர் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்; அவருடைய மறைவு தமிழக அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.