தனது பிறந்தநாளுக்கு தந்தை வீரபாண்டி ஆறுமுகம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவிருந்த நிலையில், மாரடைப்பு வீரபாண்டி ராஜா உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சரும், சேலம் மாவட்ட திமுக-வின் முக்கிய நிர்வாகியாக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனான வீரபாண்டி ராஜா, 2006 முதல் 2011 வரை வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவருக்கு வயது 58.
திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்து வந்த அவர், தனது பிறந்த நாளை முன்னிட்டு தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வீடு திரும்பியபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடல்நலக்குறைவால் ஏற்கனவே வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் செழியன் உயிரிழந்த நிலையில், தற்போது இளைய மகன் ராஜாவும் உயிரிழந்திருப்பது திமுகவினரிடையே சோகத்திய ஏற்படுத்தியுள்ளது.
திமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கட்சி பதவிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டவர் ராஜா, மேலும் எந்த பொறுப்பு கொடுத்தாலும் அதனை திறம்பட செய்து முடிக்கக்கூடியவர் வீரபாண்டி ராஜா என்று மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.