டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. சென்னை, கோவை உட்பட பல இடங்களில், குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் இது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் நல்ல தண்ணீரில் முட்டையிடும் ஏடிஸ் கொசுக்கள் தான் டெங்குவை பரப்புகின்றன. எனவே பொதுமக்கள் வீட்டை சுற்றி நல்ல தண்ணீர் குறிப்பாக மழை நீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
பொதுமக்கள் தண்ணீர் சேமித்து வைத்துள்ள குடங்கள், சிமென்ட் தொட்டிகள், டிரம்கள் போன்றவற்றை கொசு புகாதவகையில் மூடி வைக்க வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒரு முறை பிளிச்சிங் பவுடர் கொண்டு கழுவ வேண்டும்.
மேலும் தங்கள் வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் கிடக்கும் பழைய டயர். தேங்காய் சிரட்டை, ஆட்டுக்கல், பிளாஸ்டிக் கப், பெயிண்ட் டப்பா போன்றவற்றை அகற்றிட வேண்டும்.காய்ச்சல் கண்டவுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும்.
மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை அறவே கைவிட வேண்டும். பகலிலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.