கோவையில் மனைவி ஃபோனை எடுக்காத ஆத்திரத்தில் 5 வயது குழந்தையை தந்தை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சாதிக்பாஷா – ரெஜினா பானு தம்பதி. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மூத்த மகன் அம்மாவுடன் வசித்து வரும் நிலையில், இளைய மகன் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே பெற்ற மகனை தந்தை சாதிக் பாஷா கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தந்தை சாதிக் பாஷாவை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பிய நிலையில், ஆனால் அவர் செல்போனில் தொடர்பு கொண்டபோது அழைப்பை ஏற்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் இளைய மகனை மட்டும் ரெஜினா சந்தித்ததால், ஆத்திரத்தில் மது போதையில் சொந்த மகனை தாக்கியதாக போலிஸார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் மதுபோதையில் தனது மகனை, அவரது தந்தை அடித்ததாக அப்பகுதி மக்கள் போலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலிஸார் அவரை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.