மாநகர் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பணியாளர்கள் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் வகையில் 19ம் தேதி பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது என்று மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலானது வரும் 19ம் தேதி நடைபெறுவதாக குறிப்பிட்டு அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாநகர் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பணியாளர்களுக்கு (நிரந்தர பணியாளர்கள், தற்காலி பணியாளர்கள் உட்பட) 19ம் தேதி பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது.
அதன்அடிப்படையில் வரும் 19ம் தேதி சனிக்கிழமையன்று நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த தலைமை அலுவலகம், பிரிவு அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் வாக்களித்திட ஏதுவாக விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இப்பொது விடுமுறையானது, வாக்களிப்பு ஆரம்ப நேரத்திலிருந்து முடியும் நேரம் வரையில் உள்ள முறைப்பணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
அத்தியாவசிய பணியை முன்னிட்டு 19ம் தேதியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நடைமுறையில் உள்ளவாறு கூடுதல் ஊதியம் வழங்கப்படும். மாநகர போக்குவரத்து கழகம் ஒரு பொது சேவை நிறுவனம் என்பதால் வாக்களிக்க தகுதியுள்ள பணியாளர்கள் அந்தந்த கிளை மேலாளர்களிடம் முன்கூட்டியே தெரிவித்து வாக்களிக்க செல்லலாம். போக்குவரத்து பொது சேவை எவ்விதத்திலும் பாதிக்கா வண்ணம் செயல்பட வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.