ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில் நடுரோட்டில் கற்களை வீசி தாக்கி கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவிற்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமி பிரச்சார வாகனத்தில் பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். மேலும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள உறுப்பினர்கள் காலை முதலே பொதுக்குழு நடைபெறும் சென்னை வானகரம் ஸ்ரீவாரு தனியார் திருமண மண்டபத்தில் குவிய தொடங்கியுள்ளனர்.
அதேசமயம் இந்த சூழலில் ஓ. பன்னீர்செல்வம் தனது தொண்டர்களுடன் அதிமுக அலுவலகத்திற்கு புறப்பட்டுள்ளார். இதற்கு முன்பாகவே அதிமுக தலைமை அலுவலகத்தின் வாயிலில் அக்கட்சியின் தொண்டர்கள் குவிந்தனர்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே அலுவலகத்தின் முன்பாக கைகலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இரு தரப்பினரும் நடுரோட்டில் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுடுள்ளது. இதனால் அதிமுக தலைமை அலுவலகம் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.