மீன்பிடி தடைகாலம் முடிவடைந்த நிலையில் தமிழகத்தின் கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15 முதல் விசைப்படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர்.
இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் தடைக்காலம் முடிவடைந்தது. கடந்த இரண்டு நாட்களாக, மீன் பிடிக்க தேவையான வலை போன்ற உபகரணங்களை படகுகளில் ஏற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
மீன்பிடி தடைகாலம் முடிவடைந்த நிலையில் தமிழகத்தின் கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். இரண்டு மாதமாக வெறிச்சோடி காணப்பட்ட சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் இன்று மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க சென்றதால் களைகட்டியுள்ளது.
விசைப்படகுகள் புறப்படுவதற்கு முன்னதாக தேவாலயத்தில் உள்ள அருட்பணியாளர்கள் கடல் அன்னைக்கும் படகுகளுக்கும் புனிதநீர் தெளித்து சிறப்பு பிரார்த்தனைகள் செய்து அனுப்பி வைத்தனர்.
தடைக்காலம் முடிந்தும், நாகை துறைமுகத்தில் இருந்து புறப்படும் முன்பாக சூடம் ஏற்றி, பூஜை செய்து கடல் மாதாவை வணங்கினர். அக்கரைப்பேட்டை, கீச்சான்குப்பம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்கச்சென்றனர்.
மீன்பிடி தடைக்காலத்தில் மீன் வரத்து குறைந்ததால் மீன்களின் விலை பலமடங்கு உயர்ந்தது. இரண்டு மாத காலத்துக்கு பின்னர் மீன்பிடிக்க செல்வதால் அதிகளவு மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனால் மீன்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.