திருச்சி அருகே மீன்பிடி திருவிழா – 25 கிராமத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல வகையான மீன்களைப் பிடித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள நெய்வேலி ஊராட்சியில் நெய்வேலி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி சுமார் 145 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. இந்த ஏரிக்கு மழைக்காலங்களில் கொல்லிமலையில் இருந்து நீர் திருத்தலையூர் ஏரி வழியாக வந்து நிரம்பி இந்த ஏரிக்கு தண்ணீர் வந்தடையும்.
பின்பு மழை நீர் சித்தாம்பூர் ஏரிக்குச் சென்று அந்த ஏரியும் நிரம்பினால் மழைநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கும். இந்த நெய்வேலி ஏரியில் இன்று காலை மீன் பிடி திருவிழா தொடங்கியது.
பொதுமக்கள் பூவாயி தெய்வத்தை வழிபட்டு பூவாயி தெய்வத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை நடத்திய பின்பு மீன் பிடிக்கத் தொடங்கினார்கள்.
இந்த ஏரியில் நெய்வேலி கிராமத்தைச் சுற்றியுள்ள 25- கிராம பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் உற்சாகமாக மீன் பிடித்தனர்.
அதில் கெண்டை, வாழமீன், கெளுத்தி, ஜிலேபி, விரால், உள்பட பல்வேறு வகையான மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர். மேலும் 8, 7, 5, கிலோ அளவுள்ள பெரிய மீன்களை பொதுமக்கள் பிடித்து மகிழ்ந்தனர்.