இலவச மின்சார திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகையில் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டத்தில் இலவச மின்சார திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். எம் எஸ் சுவாமிநாதன் பரிந்துரைப்படி, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாகையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற்றது.
இந்த நிலையில் புத்தூரில் தொடங்கிய டிராக்டர் பேரணியை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை-மாலி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனம் மற்றும் டிராக்டரில் ஊர்வலமாக சென்ற விவசாயிகள் பேரணி, நாகை அவுரித்திடலில் நிறைவடைந்தது.
அப்போது விவசாயிகள் மீது போடப்பட்ட போராட்ட கால வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், பயனுள்ள பயிர் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.