நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்-வெளிவியாபாரிகள் நேரடியாக தலையீடு செய்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர், பூந்தமல்லி, கடம்பத்தூர், திருவள்ளூர், பூண்டி, எல்லாபுரம், திருவாலங்காடு, சோழவரம், மீஞ்சூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய 13 வட்டாரங்களில் 57 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டது.
அந்தவகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுநாள் வரை 1000 விவசாயிகளிடமிருந்து 8110.920 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இடைத்தரகர்கள் மற்றும் வெளிவியாபாரிகள் தலையீடு ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் உத்தரவு வழங்கியுள்ளார்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள உத்தரவில்..
“எந்த ஒரு விவசாயியும் தன்னுடைய அடங்கல் சான்றிதழை இடைத்தரகர்கள் மற்றும் வெளிவியாபாரிகளிடம் வழங்கியது உறுதி செய்யப்பட்டால், அந்த விவசாயிக்கு 2 வருடங்களுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய அனுமதி மறுத்து, அரசு வழங்கும் எந்தவொரு மானியத் திட்டங்களும் வழங்கப்பட மாட்டாது.
மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலையீடு செய்யும் இடைத்தரகர்கள் மற்றும் வெளிவியாபாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து நெல் எடுத்து வந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களை கொண்டு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மணிகளை மழையினால் நனையாவண்ணம் பாதுகாக்க ஏதுவாக தார்பாய்கள் வழங்கவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகளை சேமிப்பு கிடங்குகள் மற்றும் அரவை மையங்களுக்கு மாற்றம் செய்து சேமித்து வைக்கவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலைய செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து புகார்கள் எழும் பட்சத்தில், தொடர்புடைய நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.