தனியார் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டையின் (bus pothole) வழியாக சிறுமி விழுந்து பலியான சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரத்திலன் அருகே உள்ள சேலையூர் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், சுருதி என்ற 6 வயது சிறுமி இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது தனியார் பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக (bus pothole) சிறுமி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் ஆத்திரத்தில், அந்த தனியார் பள்ளி பேருந்திற்கு தீ வைத்து கொளுத்தினர். இதனையடுத்து, இந்த விபத்து தொடர்பாக பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து டிரைவர் சீமான், உதவியாளர் சண்முகம், மெக்கானிக் பிரகாசம், பேருந்தின் உரிமையாளர் யோகேஷ், பள்ளியின் தாளாளர் விஜயன் மற்றும் அவரது சகோதரர் பால்ராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் ஆகிய 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால், குற்றம் சாட்டப்பட்ட 8 பேரும் ஜாமீன் பெற்று வெளியில் வந்து விட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அரசின் தரப்பில் 35 சாட்சியங்களும், பள்ளியின் தரப்பில் 8 சாட்சியங்களும் விசாரிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்த விபத்து குறித்த விசாரணையில், பேருந்தின் உரிமையாளர் யோகேஷ், வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர் உதவியுடன் பள்ளிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு சாலை வரி கட்டணத்தை பெறுவதற்காக தன் வாகனத்தை பள்ளிக்கு சொந்தமானது என போலியாக மாற்றியது தெரியவந்தது.
மேலும், அந்த விசாரணையின் முடிவில் இந்த மோசடிக்கு துணையாக இருந்த வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து தரப்பிலும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி காயத்ரி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.
இந்நிலையில், 6 வயது அப்பாவி சிறுமி பேருந்து ஓட்டை வழியாக விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இந்த தீர்ப்பைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த பலியான சிறுமி சுருதியின் பெற்றோர், தீர்ப்பு பற்றிய முழு விவரங்கள் அடங்கிய நகல் கிடைத்தவுடன் வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.