தமிழக மக்களுக்கு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என்று பாஜக தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை கூறவில்லை என்றால் பரவாயில்லை. மாநிலத்தின் முதல்வராக அவர் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும். வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில், அந்தத் தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், `அங்கன்வாடி மையங்களுக்கு கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறேன்.
சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளில் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்குமாறு முதல்வர் கூறியிருந்தார்.அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட 10 முக்கிய பிரச்னைகளின் பட்டியலை அளித்திருக்கிறேன். ஒரு கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறவில்லை என்றால் பரவாயில்லை.
ஆனால், மாநிலத்தின் முதல்வராக அவர் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும். தொடர்ந்து அவர் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துகளை தெரிவிக்காமல் இருக்கிறார்.
இது குறித்து சட்டசபையில் உறுப்பினர்கள் கேள்விகேட்டபோது, மழுப்பலாக பதில் அளித்தாரே தவிர, எல்லோருக்கும் பொதுவான முதல்வர் என்று சொல்லவில்லை. சிறுபான்மை மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர், இந்துக்கள் பண்டிகைகளை ஒதுக்கிறார்.
மேலும் தமிழக முதலமைச்சர் திரும்ப திரும்ப அந்தத் தவறை செய்து கொண்டிருக்கிறார் என்றும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியானவுடன் ஒரு பேச்சு என்பதை தி.மு.க வழக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் உள்ள மக்களை ஆளும்கட்சியான திமுக பாகுபாடு பார்ப்பதாகவும் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.