பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் வலியுறுத்தலை ஏற்று கிண்டியில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அரசு அமைப்பது மகிழ்ச்சியளிக்கிறது என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..
“சென்னையில் கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டு மீட்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்தில், அரசுப் புறம்போக்கு என்னும் வகைப்பாட்டில் இருக்கும் 118 ஏக்கர் நிலத்தில் மிகச்சிறந்த சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இதற்காக சம்பந்தப்பட்ட நிலத்தை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சென்னை மாநகரத்தின் மக்கள்தொகை 86.9 லட்சம். மக்கள்தொகைப் பெருக்கம் மற்றும் நகர்ப்புறங்களில் அதிக மக்கள் குடியேறுதல் காரணமாக சென்னையின் மக்கள்தொகை கடந்த 15 ஆண்டுகளில் கணிசமாக இப்போது ஒரு கோடியை கடந்திருக்கக்கூடும்.
இந்திய அளவிலும், உலக அளவிலும் இந்த அளவுக்கு மக்கள்தொகை கொண்ட மாநகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னையில் உள்ள பூங்காக்களின் பரப்பு மிகவும் குறைவு. அதனால், சென்னையில் மிகப்பெரிய பூங்காக்களை அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதையேற்று கிண்டியில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அரசு அமைப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அதைவிட மகிழ்ச்சியளிக்கும் செய்தி சென்னையின் பசுமைப்பரப்பு மிகவும் குறைவாக இருக்கிறது என்பதை முதன்முறையாக தமிழக அரசு ஒப்புக்கொண்டு, பசுமைப்பூங்கா அமைக்க வேண்டியிருப்பதை வலியுறுத்தியிருப்பதுதான். “சென்னையில் ஒரு தனி மனிதருக்கான பசுமை நிலப் பகுதி (Per capita green cover) 1.03 சதுர மீட்டராகவும் உள்ளது.
இதையும் படிங்க : September 23 Gold Rate : தங்கம் விலை.. இன்றைய நிலவரம்?
மேலும் சென்னைப் பெருநகரின் பசுமை வெளியானது, வனப்பகுதி, பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், திறந்த வெளித்திடல்கள் என அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக சென்னையின் பரப்பில் வெறும் 6.7 சதவீதமாகத்தான் உள்ளது” என்று தமிழக அரசு ஒப்புக் கொண்டிருப்பது மனநிறைவளிக்கிறது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், கிண்டியில் 118 ஏக்கரில் பூங்கா அமைக்கப்பட்டாலும்கூட சென்னையின் பசுமைப்பரப்பு பிற நகரங்களுக்கு இணையாக இருக்காது. டெல்லியில் மெஹ்ராலி பூங்கா 200 ஏக்கரிலும், லோதி பூங்கா 90 ஏக்கரிலும் அமைந்துள்ளன. இவை தவிர புதுடெல்லியின் பதர்பூர் பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய பூங்கா 880 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரில் லால்பாக் பூங்கா 240 ஏக்கரிலும், கப்பன் பூங்கா 100 ஏக்கரிலும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நகரங்களுக்கு இணையாக சென்னையின் பசுமைப்பரப்பை அதிகரிக்க கிண்டியில் அமைக்கப்படுவது போன்ற பூங்காக்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட வேண்டும்.
எனவே, சென்னையில் கிண்டி பூங்கா தவிர, கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைந்துள்ள 36 ஏக்கர், தனியார் பேருந்து நிலையம் அமைந்துள்ள 6.8 ஏக்கர், கோயம்பேடு சந்தைப் பூங்கா அமைந்துள்ள 7.6 ஏக்கர், கூடுதலாக உள்ள நிலம் 16 ஏக்கர் ஆகியவற்றைச் சேர்த்தால் கிடைக்கும் மொத்தம் 66.4 ஏக்கர்பரப்பளவில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்வதற்கான வசதிகளுடன் சென்னையின் இரண்டாவது மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.