கிரீஸ் நாட்டின் அருகே பெலோபொன்னீஸ் கடல் பகுதியில் 750 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் கடலில் மாயமாகி உள்ளதாக அஞ்சப்படுகிறது.
உள்நாட்டு போர் மற்றும் மோசமான பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்களால் ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகள் பாதிக்கப்படும் நிலையில், அந்த நாட்டு மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
அதில், ஒரு சில நாடுகள் மட்டுமே அப்படி வரும் அகதிகளை ஏற்றுக் கொள்கின்றன. இப்படி அகதிகளாக வெளியேறும் மக்கள் ஆபத்தான வகையில் கப்பல், சிறிய படகுகள் மூலம் பயணம் மேற்கொள்கின்றனர்.
அவ்வாறு பயணிப்பவர்களில் பெரும்பாலானோர் கடலை கடந்து சென்று விட்டாலும், ஒரு சில நேரங்களில் அந்த பயணங்களின் போது மோசமான விபத்துகளும் நடப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், அது போன்ற ஒரு மோசமான விபத்து தான் தற்போது கிரீஸ் நாட்டின் அருகே நடந்துள்ளது.
பெலோபொன்னீஸ் கடல் பகுதியில் 750 பேரை ஏற்றுக்கொண்டு சென்ற படகு கவிழ்ந்ததில் 78 பேர் உயிரிழந்து உள்ளனர். மீதமுள்ளவர்களில் பலர் கடலில் மாயமாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்நிலையில், அவர்களை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த படகு விபத்தில் 100 குழந்தைகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் எகிப்து நாட்டை சேர்ந்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த படகில் பயணம் செய்தவர்கள் பலரின் நிலை என்னவென்று தெரியாமல் இருக்கும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது. இந்த படகு இத்தாலிக்கு அகதிகளாக சென்றவர்களை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் சுமார் 600 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.