மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் (Grievance meeting) தர்ணா போராட்டம்.
மதுரை மாநகராட்சி 2ஆவது மண்டலம் சார்பில் ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில் குறைதீர் கூட்டமானது (Grievance meeting) மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்று மனு அளிக்க வந்த 20ஆவது வார்டு அதிமுக கவுன்சிலரான நாகஜோதி தலைமையல் அந்த வார்டு சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மேயர் முன்பாக மண்டல அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, மேயரை சந்தித்து அதிமுக கவுன்சிலர் நாகஜோதி தனது பகுதியில் சாலை , குடிநீர் வசதி , பாதாள சாக்கடைக்கு தோண்டபட்ட குழிகள் மூடப்படவில்லை என்பது குறித்து முறையிட்டனர்.
இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் குற்றம்சாட்டினர். இதற்கு பதில் அளித்த மாநகராட்சி ஆணையர் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி 14வது வார்டு அதிமுக உறுப்பினர் மாணிக்கம் தனது வார்டு பகுதியில் மாநகராட்சி குடிநீர் குழாய்களில் இருந்து குடிநீர் நாள்தோறும் வீணாக வெளியேறி வருவதாகவும் இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதை விட அதிக அளவில் குடிநீர் வீணாக சாலையில் செல்வதாகவும் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த ஆணையாளர் விரைவில் பணிகள் நடைபெறும் எனவும் குடிநீர் குழாய்களில் உடைப்பு சரி செய்து குடிநீர் வீணாவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மாநகராட்சி பகுதிகளில் ஜேசிபி செய்தி இயந்திரங்கள் இல்லாத நிலையில் தான் இது போன்ற பணிகள் முடங்கியுள்ளதால் கூடுதலாக வாகனங்கள் வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக மண்டல அலுவலக நுழைவாயில் பகுதியில் அதிமுக கவுன்சிலர் நாகஜோதி தலைமையிலான வார்டு பொதுமக்கள் மாநகராட்சியை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து திமுக கவுன்சிலரின் கணவரான மானகிரி ராஜேஷ் கண்ணா தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் முடிந்து புறப்பட்ட மேயரை முற்றுகையிட்டு தங்கள் பகுதிகளுக்கு குடிநீர் வசதி இல்லை என கூறினர்.
இதனைத் தொடர்ந்து ஆணையாளர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைய செய்தார். மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.