டிசம்பர் 25-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் சுமார் ஓன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டு ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு வகுப்புக்கள் நடத்தப்பட்டன. கொரோனா குறைந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புக்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த கனமழை காரணமாக நவம்பர் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மழை மற்றும் கொரோனா காரணமாக ஏற்கனவே பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால், ஆண்டுதோறும் அரையாண்டு தேர்வு முடிந்தவுடன் பள்ளிகளுக்கு விடப்படும் விடுமுறை இந்த ஆண்டு பள்ளிகளுக்கு கிடையாது என்று செய்திகள் பரவியது.
இதனை அடுத்து கொரோனா காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து இதர பணிகளை மேற்கொண்டனர் என்றும் அரையாண்டு விடுமுறை வேண்டும் என்பதே அனைத்து மாணவர்களின் விருப்பம் எனவும் தமிழக அரசு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்து இருந்தது.
தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் நெல்லையில் பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளுக்கு டிசம்பர் 25-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படும் என்று அவர் தெரிவித்தார்.