மதுரையில் கார் ஓட்டிகொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதில் அடுத்தடுத்த வாகனங்களின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், 2 பேர் காயம் அடைந்தனர்.
மதுரை மாவட்டம் கூடல்நகர் அப்பாத்துரை நகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபரான செந்தில்குமார். 47 வயதான இவர் தனது காரில் சிக்கந்தர்சாவடி பகுதியிலிருந்து செல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கூடல்நகர் மேம்பாலத்தின் நடுவே வந்த போது திடிரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓட தொடங்கியதில் முன்னால் சென்ற அடுத்தடுத்த இரு சக்கர வாகனங்களில் மோதியது. இதில் இரு சக்கர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த மதுரை ஆனையூர், TNHB காலனி பகுதியை சேர்ந்த சங்கர் மற்றும் அவரது மனைவி நாகலெட்சுமி ஆகியோர் சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதியதில் நாகலெட்சுமி கீழே விழுந்த நாகலெட்சுமி படுகாயமடைந்தார்.
இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த சங்கரை கார் தரதரவென பாலத்தின் சுவரோடு உரசியபடி நீண்டதூரம் இழுத்துசென்றதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செல்லூர் காவல்துறையினர் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்தில் மேலும் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரை ஓட்டிவந்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தால் அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.