பருவமழை மீண்டும் தீவிரமடைந்து வருவதால் இன்று முதல் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் வடகிழக்கு திசையில் இருந்து வீசும் காற்று வலுவடைந்து வருவதால் . தமிழகத்தில் கனமழை வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று (நவ.20) கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களிலும், வரும் 25-ம் தேதி ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
22-ம் தேதி திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
23-ம் தேதி தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.