தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் மிக கன மழைபெய்யும் (heavy rain) என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஜூலை 8 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இன்று நீலகிரி, கோவை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை (heavy rain) பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பூண்டி வெள்ளிங்கிரி மலை, தொண்டாமுத்தூர், இருட்டு பள்ளம், நரசிபுரம் மருதமலை போன்ற இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
இதனால், கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து இன்று முதல் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
நேற்று மாலை தருமபுரி, இலக்கியம்பட்டி, செந்தில்நகர், ஒட்டப்பட்டி, நல்லம்பள்ளி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது.
மேலும், கொடைக்கானல், நாயுடுபுரம், ஏரிச் சாலை, அப்சர்வேட்டரி, கல்லுக்குழி, மூஞ்சிக்கல், அண்ணாசாலை உள்ளிட்ட நகர்ப்பகுதிகளிலும் வில்பட்டி, பள்ளங்கி, பாறைப்பட்டி, அட்டுவம்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களிலும் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது.