தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை செய்து வருகிறது. பகல் நேரங்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டாலும் இரவு நேரங்களில் மழை பெய்து குளிர்வித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, (இன்று) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆக.28 வரை தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24.08.2023 முதல் 26.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை.. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.