ஹைதி (haiti) நாட்டில் கடந்த சனிக்கிழமை முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் நாட்டின் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளிட்ட நகரங்களில், ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தொடர் கனமழையால் லியோகன் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஆறுகள் நிரம்பி வீடுகளிலும் விளைநிலங்களிலும் தண்ணீர் புகுந்ததோடு, நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், சுமார் 13,400 பேர் தங்களது இருப்பிடங்களை விட்டு புலம்பெயர்ந்து சென்றுள்ளதாகவும், பலருக்கும் உணவு, குடிநீர் மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்கள் அவசர தேவையாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் சில பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதனால், சுமார் 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஹைதி (haiti) நாட்டு அதிகாரிகள் கூறுகையில், தலைநகர் போர்ட்-ஆவ்-பிரின்ஸ் பகுதியில் இருந்து தென்மேற்கே 40 கி.மீ. தொலைவில் அமைந்த லியோகன் நகரம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது எனவும், இதனால், தற்போதுவரை 42 பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும் கூறியுள்ளனர்.